×

குயிலியின் வரலாற்றை பெண்கள் தெரிஞ்சுக்கணும்!

நன்றி குங்குமம் தோழி

சுதந்திரப் போராட்ட வீரமங்கையில் ஒருவர் குயிலி. இவரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து நடித்து மேடையில் அரங்கேற்றியதற்காக மாநில அளவில் முதல் பரிசை பெற்றுள்ளார் பள்ளி மாணவி பிரியவர்ஷினி. பெண்ணிய கதாபாத்திரங்களை உள்வாங்கி நடிப்பது என்பது ெகாஞ்சம் கடினமான விஷயம்தான். ஆனால் அந்த கதாபாத்திரத்தை ஏற்று திறமையாக நடித்து பரிசும் பெற்றுள்ளார். ‘‘தமிழ்நாடு மட்டுமல்ல உலகம் முழுவதும் குயிலியின் புகழை கொண்டு செல்ல வேண்டும்’’ என்கிறார் பிரியவர்ஷினி.

‘‘சொந்த ஊரு கும்மிடிப்பூண்டி. அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 படிக்கிறேன். அப்பா, அம்மா இருவருமே கூலி வேலைக்குத்தான் போறாங்க. நான் நல்லா பேசுவேன். என்னுடைய பேச்சுத் திறமையை பார்த்து அவங்க ரொம்பவே சந்தோஷப்படுவாங்க. அதனால் ஆறாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்தே நான் பள்ளி நிகழ்ச்சியில் நடைபெறும் பேச்சுப் போட்டிகளில் கலந்துகொள்வேன். அதில் பரிசும் பெற்றிருக்கேன். எங்களின் அனைத்து பள்ளி நிகழ்விற்கும் உஷா ஸ்ரீதர் தான் தலைமையேற்க வருவார்.

அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். பேச்சுப் போட்டில் முதல் பரிசினைப் பெற்றவர்கள் அவர் முன் பேச பள்ளி நிர்வாகத்தில் அனுமதி அளிப்பார்கள். நான் பேச்சுப் போட்டியில் வெற்றிப் பெற்றாலும், முதல் இடத்தை பிடிக்க முடியவில்லை. அதனால் எனக்கு அவர் முன் பேசுவதற்கான வாய்ப்பு அமையாமலே இருந்து வந்தது. அவர் முன் எப்படியாவது பேசியாக வேண்டும் என்று முடிவு செய்ேதன். நான் எங்கு தவறு செய்கிறேன் என்று யோசிக்க ஆரம்பித்தேன். அந்த தவறுகளை எல்லாம் சரி செய்தேன். அடுத்து நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் உணர்ச்சிப்பூர்வமாகவும், புதுப்புது தகவல்களை சேர்த்தும் பேசத் தொடங்கினேன்’’ என்றவரின் நீண்ட நாள் கனவு நினைவானது.

‘‘அப்ப நான் 8ம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். அந்த வருடம் பேச்சுப்போட்டி நடைபெற்றது. அதில் அம்பேத்கரை பற்றி பேச வேண்டும். நான் அவரை பற்றி நிறைய தகவல்களை சேகரித்தேன். அதைக்கொண்டு எப்படி பேச வேண்டும் என்ற பயிற்சியும் எடுத்தேன். என்னுடைய பேச்சு பலருக்கு பிடிச்சிருந்தது. அந்தப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைச்சது. என்னுடைய நீண்ட நாள் கனவான உஷா தர் அவர்கள் முன் பேசவும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு நான் கலந்துகொண்ட போட்டிகள் அனைத்திலும் முதல் பரிசு பெற ஆரம்பித்தேன். பேச்சுப் போட்டி ஒரு பக்கம் இருக்க, நான் நாடகத்திலும் நடித்து வந்தேன். நானும் என் தோழிகளும் சேர்ந்து நாடகம் ஒன்றை அமைத்தோம். அந்த நாடகம் பள்ளி அளவில் நடந்த போட்டியில் முதல் இடத்தைப் ெபற்றது. நான் நடித்ததைப் பார்த்த என் ஆசிரியை ஒருவர் ‘உன் பேச்சு உணர்வுப்பூர்வமாக இருக்கு, அதனால் நீ தொடர்ந்து நாடகத்திலும் நடி.

உனக்கு கண்ணகி கதாபாத்திரம் மிகவும் பொருத்தமாக இருக்கும்’ என்று என்னை மேலும் ஊக்குவித்தார். அவர் ெசான்ன பிறகு கண்ணகியை பற்றித் தேடிப் படிக்கத் தொடங்கினேன். செய்யாத குற்றத்திற்குக் கொல்லப்பட்ட தன் கணவனுக்காக நீதி கேட்டு மன்னனை எதிர்த்து மதுரையை எரித்தவர். அவரைப் பற்றி படித்த பிறகு இப்படியும் ஒரு பெண்ணா என்று வியந்திருக்கேன். அநீதியைத் தட்டி கேட்கும் ஆக்ரோஷமான பெண்ணாக உருமாறிய கண்ணகி எனக்குப் பிடித்துப் போனார். அவரைப் பற்றி வெளியான பூம்புகார் திரைப்பட வசனங்களை தனியாக எழுதி வைத்து மனப்பாடம் செய்து நடித்து பார்த்தேன். என்னுடைய நடிப்பை என் ஆசிரியரிடம் செய்து காண்பித்தேன்.

அவரும் சில திருத்தங்கள் செய்தார். அந்த வருடம் என் பள்ளி விழாவில் நான் கண்ணகி நாடகத்தினை அரங்கேற்றினேன். என் நடிப்பை பார்த்து எல்லோரும் பாராட்டினாங்க. இந்த பாராட்டுகள் எனக்குள் மேலும் பல கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில்தான் எங்களுடைய ஊரில் தெருக்கூத்து ஒன்று நடந்தது. அதில் நடித்தவர்களிடம் நடிக்க பழகலாம்னு நினைத்தேன். அம்மாவை அழைத்துக் கொண்டு தெருக்கூத்து நடத்திய ரூபன் அண்ணாவைப் பார்த்து என் விருப்பத்தை சொன்னேன். அவர் முன் நடித்தும் காண்பித்தேன். என் நடிப்பை பார்த்து பாராட்டியவர், எனக்கு ஸ்ரீராம் சாரை அறிமுகம் செய்தார். அவரிடம் நான் நடிப்பு குறித்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். அவர்தான் எனக்கு குயிலி கதாபாத்திரம் பற்றி சொன்னார்.

குயிலி, வேலுநாச்சியாரின் மெய்காப்பாளராக இருந்தவர். பெண்களின் படைத் தளபதியாகவும் இருந்தார். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக வீரத்தோடு போராடியவர். கடைசியாக வெள்ளையர்களின் ஆயுத குடோனிற்குள் புகுந்து தன் உடலில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு தன்னை அழித்துக் கொண்டது மட்டுமில்லாமல் ஆங்கிலேயர்களின் ஆயுத குடோனையும் முற்றிலும் அழித்தார்.

சுதந்திரத்திற்காக போராட்டத்தில் தன் உயிரைக் கொடுத்தவர் என்று எண்ணிய போது எனக்கு அவர் மேல் அளவில்லாத அன்பு ஏற்பட்டது. அவரைப் பற்றி யாருக்கும் தெரியாது. அதனால் என் பள்ளி நிகழ்ச்சியில் அவரைப் பற்றி நடிக்க முடிவு செய்தேன். ராம் சார்தான் எனக்கு வசனங்கள் எழுதிக் கொடுத்தது மட்டுமில்லாமல் எப்படி நடிக்க வேண்டும்னு சொல்லிக் கொடுத்தார். எனக்கு நடிப்பு பற்றி நிறையத் தகவல்களைச் சொல்லிக் கொடுத்தார். நான் நிறையவே கற்றுக்கொண்டேன்.

ஒரு கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் போது, அந்த கதாபாத்திரத்தின் தன்மையை சரியாக வெளிப்படுத்த வேண்டும். அதற்காக நான் நிறைய பயிற்சி எடுத்துக் கொண்டேன். நடிக்க நடிக்க குயிலி கதாபாத்திரம் என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. குயிலியாகவே வாழ்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். நாடக அரங்கேற்றமும் நடந்தது. நான் நினைத்தது போலவே பலரும் என் நடிப்பைப் பார்த்து வியந்து போனார்கள். குயிலி கதாபாத்திரம் பலருக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

பலர் குயிலி நாடகத்தை நடிக்கச் சொல்லி வாய்ப்பு அளிக்க முன்வந்தார்கள். அதனால் பல இடங்களுக்கு சென்று குயிலி நாடகத்தை நடித்து வந்தேன். அந்த சமயத்தில்தான் தமிழ்நாடு அரசு நடத்திய கலைத்திருவிழாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குயிலி கதாபாத்திரத்தை ஏற்று நடித்தேன். மாநில அளவில் முதலிடம் கிடைத்தது. இது எனக்குக் கிடைத்த முக்கிய பரிசாக நினைக்கிறேன். இதே போல இன்னமும் குயிலியை பல இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை’’ என்கிறார் பிரியவர்ஷினி.

தொகுப்பு: மா.வி.குமார்

The post குயிலியின் வரலாற்றை பெண்கள் தெரிஞ்சுக்கணும்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Veeramangai ,Priyavarshini ,
× RELATED உன்னத உறவுகள்